சென்னை:தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுக்களில் ஈடுபட்டு, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வாரம் தாம்பரம் மற்றும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த இருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த ரீதியில் சட்டம் இயற்றலாம் என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர், மசோதாவில் உரிய திருத்தங்களை செய்து அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடுகள், கடமைகள் என்னென்ன? தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை அவர் கட்டாயம் ஏற்க வேண்டுமா? ஆளுநருக்கான சிறப்பு அதிகாரங்கள் என்ன? என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
"ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்":இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், "இந்திய அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருப்பதாக ஆளுநர் கருதி ஒப்புதல் அளிக்க மறுத்தால், அமைச்சரவை மீண்டும் சட்ட முன்வரைவை ஆளுநருக்கு அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
மீண்டும் மசோதாவை மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒருவேளை ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தருவதாக மாநில அரசு கருதினால், நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் நீதிமன்றங்களும் ஆளுநரின் விளக்கத்தை கேட்குமே தவிர, ஆளுநருக்கு எதிராக உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவுகளை பிறப்பிக்காது" என்றார்.