உயர்நீதிமன்றம், சென்னை:சென்னை புளியந்தோப்பு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர், செல்வகுமார். இவர், தனக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த 2018ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் செல்வகுமார் கடந்த 2019ஆம் ஆண்டு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விளக்கமளித்த மாநகராட்சி நிர்வாகம், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் மனுதாரர் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 22 பேருக்கு, அதே ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 2013ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியுள்ளன என மாநகராட்சி நிர்வாகத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மாநகராட்சி நிர்வாகம், 400 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பணியிடம் கூட இதுவரை நிரப்பப்படவில்லை எனவும் விளக்கம் அளித்தது.