சென்னை:கோரக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோரக்பூர் - லக்னோ மற்றும் ஜோத்பூர் - அகமதாபாத் (சபர்மதி) ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று (ஜூலை7) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கோரக்பூர் - லக்னோ, ஜோத்பூர் - அகமதாபாத் மற்றும் சென்னை - விஜயவாடா ஆகிய மூன்று நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியது.
ஆனால், இரண்டு நகரங்களுக்கு மட்டுமே வந்தே பாரத் ரயில் தொடங்கிய நிலையில் சென்னை - விஜயவாடா இடையேயான சேவை ஏன் தொடங்கவில்லை என கேள்வி எழுந்தது. சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 24 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஏற்கனவே சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை - விஜயவாடா இடையேயான சேவை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இயக்கும் என பேசப்பட்டது.
மேலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக விஜயவாடா செல்லும் எனவும், விஜயவாடாவில் இருந்து மறுமார்க்கமாக அதே வழியாக திரும்பும் எனவும் கூறப்பட்டது.
சுமார் 630 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும் என்றும், விஜயவாடாவில் இருந்து ரேணிகுண்டா வழியாக இந்த ரயிலை இயக்குவதன் மூலம் திருப்பதிக்குச் செல்பவர்கள் அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டன.
மேலும், ஜூலை 7ஆம் தேதி வந்தே பாரத் சேவை தொடங்கும் எனவும் ஜூலை 8ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்பட்டது. சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் ஏன் தொடங்கவில்லை என தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கு.கணேசனிடம் கேட்டபோது, “சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எங்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை.
கோரக்பூர் - லக்னோ மற்றும் ஜோத்பூர் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எப்போது தொடங்கும் என்பதை சரியாக கூற முடியாது” என தெரிவித்தார்.