சென்னை:கரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2டிஜி எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள நிலையில், அதை சந்தைக்கு கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், ஒரு ஆய்வகத்துக்கு மட்டுமே இந்த மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்னதாக விசாரணைக்கு வந்தபோது மனு குறித்து இன்று (ஜூன்.25) ஒன்றிய அரசு விளக்கமளிக்கும்படி கோரியிருந்தனர்.
2டிஜி மருந்து குறித்து விளக்கம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற மனு மீதான விசாரணையின்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களைக் கேட்டதாகவும், அதற்கு 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்வதற்காக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, விரைவில் இது குறித்த விவரங்களை வழங்குவதாக ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் இரண்டு நாள்களில் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.