சென்னைபெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த வி.செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
அதில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்குத்தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10ஆயிரம் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கடந்த 12 ஆண்டுகளாக இந்தப்பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 1020 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேலைப்பளு அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பள்ளி கல்வித்துறை சார்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.