சென்னை:தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
இதனையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் வென்ற கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனிடையே, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சி மேயர் பதவிகளை திமுக தன்வசம் வைத்துக்கொள்ள திமுக முடிவு செய்துள்ளது. இச்சமயத்தில் நான்கு மாநகராட்சி துணை மேயர் பதவிகளைக் கூட்டணிக் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்திவருகின்றன. இப்படி ஒரு புறம் கூட்டணிக்குத் துணை மேயர் வாய்ப்பு தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னையில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கூட்டணி கட்சியின் கோரிக்கை
இதில், திருப்பூர், சிவகாசி, ஓசூர் நாகர்கோவில் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் நான்கு துணை மேயர் பதவி வழங்க வேண்டுமெனக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
கடலூர் துணை மேயர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் தங்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளது. கடலூர் நகராட்சியாக இருந்தபோது விசிக துணைத் தலைவர் பதவியைப் பெற்றிருந்தது.
இதனிடையே, 21 மாநகராட்சி மேயர் / துணை மேயர், 138 நகராட்சி, 489 பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நிலையில், மேயர் / துணை மேயர் தேர்தலுக்காக கவுன்சிலர் பட்டியலை அளிக்குமாறு திமுக தலைமை அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
முதல் பெண் மேயர்
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் திமுக 153, காங்கிரஸ் 13, சிபிஎம் 4, விசிக 4, மதிமுக 2, முஸ்லீம் லீக் 1, சிபிஐ 1 மற்றும் அதிமுக 15, பாஜக 1, அமமுக 1, 5 சுயேச்சை கவுன்சிலர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.