சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் மாநிலங்களுக்குள் பால் உற்பத்தி பகுதியை மீறாமல் தங்களது கூட்டுறவு சங்கங்கள் செழிக்க பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், அமுல் நிறுவனம் எல்லை தாண்டி கொள்முதல் செய்வதாக தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அமுல் நிறுவனத்தின் இந்த செயல்பாடு, கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்படும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கூட்டுறவு சங்கங்கள் இடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் எனவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பது சரி தானா என்பது விவாதப் பொருளாகி உள்ளது. பால் பொருட்கள் சார்ந்த துறை அமித்ஷாவின் கீழ் வரவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலையின் பேச்சை தமிழ்நாடு பாஜக பகிர்ந்துள்ளது. அதில் "அமித்ஷாவின் 9 ஆண்டு கால மத்திய அமைச்சர் பதவி வரலாற்றில் ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்" என கிண்டலாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "பாஜகவின் தமிழ்நாடு பிரிவு தன்னிடம் உள்ள 20,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை விட இன்னும் அதிகம் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்களின் துறைகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அமுல் என்பது ஒரு கூட்டுறவு சங்கம்.