சென்னை: கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐபிஎஸ், இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 6.45 மணியளவில் வழக்கம்போல டிஐஜி விஜயகுமார் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அதன் பிறகு தனது மெய் பாதுகாவலரிடம் துப்பாக்கியை பெற்றுக் கொண்டு அவரது அறைக்கு சென்ற விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 2009 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார்.
நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார், குறிப்பாக சிபிசிஐடி எஸ்பியாக இருந்தபோது தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், சுரானா வழக்கில் சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்க நகைகள் மாயமான விவகாரத்திலும் விசாரணை அதிகாரியாக விஜயகுமார் செயல்பட்டார்.
அதன் பின்னர் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றியபோது, அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் பெட் வங்கியில் நடந்த 20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை வழக்கை திறம்பட கையாண்டு ஒரே நாளில் குற்றவாளியை கைது செய்து பாராட்டைப் பெற்றார்.