திருச்சி:நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உதயசூரியன் உதித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெருவாரியான வார்டுகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.
இதனிடையே, திருச்சி மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதாவிற்குத்தான் துணை மேயர் என அடித்துச் சொன்னவர்கள் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோர் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவுடன் கண்டிப்பாக இவர்தான் போல இருக்கிறது என ஆரூடத்தை அழுந்தச் சொல்ல ஆரம்பித்தனர்.
அதன்பின் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
அட அட சரி சரி என மகிழ்ச்சியானதாம் சுஜாதா தரப்பு. ஆனால், முதலமைச்சரோ நேருவை நேராக கையைக்காட்டி அவரிடம் எதுவாக இருந்தாலும் நேராகப் பேசிக்கொள்ளுங்கள் என பொக்ரான் குண்டை போட்டு இருக்கிறார். இது என்னடா செட்டிநாட்டுக்கு வந்த சோதனை என நேருவிடம் பேசாமல் ப.சிதம்பரம் நேராகக் கிளம்பி விட்டாராம்.