ஐதராபாத் :இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 17) ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 27 புள்ளி 3 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் சாய் சுதர்சன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
16 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 117 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்ரேயஸ் ஐயர் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 55 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
அரைசதம் விளாசிய சாய் சுதர்சன் இன்று ஒருநாளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார். அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய 17வது வீரர் என்ற சிறப்பை சாய் சுதர்சன் படைத்து உள்ளார். அதேநேரம், இந்திய அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசிய முதல் தமிழக வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்து உள்ளார்.
இதற்கு முன் கடந்த 1934 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த எம்ஜே.கோபாலன் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்டத்தில் 18 ரன்கள் எடுத்து இருந்தார். அதன் பின் ஏறத்தாழ 89 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தொடக்க ஆட்டத்தில் அரை சதம் விளாசிய முதல் தமிழக வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சாய் சுதர்சன்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாய் சுதர்சன், விளையாட்டை பின்னணியாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பரத்வாஜ், தெற்கு ஆசிய தடகள போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அவரது தாய் உஷா, தமிழ்நாடு வாலிபால் அணியில் விளையாடி உள்ளார்.
விளையாட்டு பின்னணியை கொண்ட சாய் சுதர்சன் தனது கிரிக்கெட் பயணத்தை திருவல்லிக்கேனி பிரண்ட்ஸ் அணியில் இருந்து தொடங்கி உள்ளார். தொடர்ந்து தமிழகத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைத்து விளையாடி வந்தார். தொடர்ந்து அபாரமாக செயல்பட்டதன் மூலம் 2019 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தமிழக அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன். அதன் பின் ரஞ்சி கோப்பை, சையது முஸ்டாக் அலி உள்ளிட்ட தொடர்களுக்கான தமிழக அணியில் இடம் பிடித்தார். ரஞ்சி கோப்பையில் தனது அறிமுக ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக 273 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸர் எடுத்து 179 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதேநேரம், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு களமிறங்கிய சாய் சுதர்சன் முதல் ஆட்டம் முதல் அந்த சீசன் முதல் அபாரமாக செயல்பட்டு தேர்வு குழு உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமான சாய் சுதர்சனை, கடந்த 2022 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. குஜராத் அணியில் தமிழக ஆல் - ரவுண்டர் மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் காயம் காரணம் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் 31 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அந்த சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு அரை சதம் உள்பட 145 ரன்களை சாய் சுதர்சன் சேர்த்தார். தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அதே குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய சாய் சுதர்சன் பேட்டிங்கில் முத்திரை பதிக்கத் துவங்கினார்.
அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறிய சாய் சுதர்சன், பல்வேறு லீக் ஆட்டங்களில் நிலைத்து நின்று விளையாடி சீரான இடைவெளியில் ரன் குவித்து அணியின் நன்மதிப்பை பெற்றார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சாய் சுதர்சன் உருவெடுத்தார்.
அந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 47 பந்துகளில், 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் என விளாசி 96 ரன்களை சாய் சுதர்சன் குவித்து குஜராத் டைட்டன்ஸ் மற்றுமல்ல சென்னை அணி வீரர்களையும் வாய்பிளக்கச் செய்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை திறம்பட கையாண்டு வெற்றி வாகைசூடி வரும் சாய் சுதர்சன், தற்போது இந்திய அணிக்காக களமிறங்கி தனது அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் விளாசி ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் கவனம் ஈர்த்து உள்ளார் சாய் சுதர்சன்.
இதையும் படிங்க :Ind Vs SA : தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது இந்தியா! தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரம்!