தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கும் ஒரே கட்டமாக
கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டதோடு, அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே-2) காலை 8 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகள்
இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 14 மேஜைகள், அதிகபட்சம் 28 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த மேஜைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 75 மையங்களிலும் 3,372 மேஜைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 739 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
16 ஆயிரம் பணியாளர்கள்
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையின் தபால் வாக்குகளை எண்ணுவதற்குத் தனியாக 309 மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4,420 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவர்களுக்கு ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. என்றாலும் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், பாதுகாப்பு உடை போன்றவை வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.