சென்னை:நாடு முழுவதும் வரும் திங்களன்று 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாட்டின் பிரதமரும், குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவர் மட்டுமே கொடியேற்றி வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றுவதும், குடியரசுத் தினத்தன்று மாநில ஆளுநர் தேசிய கொடியேற்றுவதும் வழக்கமாக இருந்துவருகிறது. இந்த வழக்கம் 1974 ஆம் ஆண்டுக்கு முன் கிடையாது. அதாவது மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றினர்.
மறுக்கப்பட்ட உரிமை அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தன்றும் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தார்கள். இதற்கு மற்ற மாநில முதலமைச்சர்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அப்படி இருக்கவில்லை. 1969ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாநில முதலமைச்சர்களுக்கு தலைநகரங்களில் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று கருணாநிதி வெளிப்படையாக பேசினார்.
1969ஆம் ஆண்டு முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட கருணாநிதி, "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற தத்துவத்தை மாநிலம் முழுவதும் முழங்கி வந்தார். இந்த முழுக்கம் டெல்லி வரை சென்றது. இதனையேற்றுக்கொண்ட மத்திய அரசு, ”மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்றும் ஆளுநர்கள் குடியரசு தினத்தன்றும்" கொடியேற்றலாம் என்று சட்டம் கொண்டுவந்தது.