சென்னையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி முதல் சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்து மூன்று வருடங்களாக செயல்பட்டு வந்த ஏ.கே. விஸ்வநாதனை தற்போது உள்துறை அமைச்சகம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
அதனையடுத்து தற்போது புதிய சென்னை காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1972 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். தந்தை வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று சிவில் தேர்வு எழுதியுள்ளார். அதில், தனது 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.
காவல்துறையில் 1994 ஆம் ஆண்டு பேட்ச் அலுவலரான இவர், முதன்முதலில் தேனி எஸ்.பியாக கால்பதித்தார். அங்கு சிறப்பாக விளங்கியதால் தூத்துக்குடி எஸ்பியாக பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
பின்னர் 2001 ஆம் ஆண்டு சென்னை பூக்கடை காவல் மாவட்ட சரகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் போக்குவரத்து தெற்கு துணை ஆணையராக பணியாற்றி உள்ளார். அதன் பின்பு சிபிஐ அதிகாரியாக சுமார் 10 ஆண்டுகள் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றி வந்த மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதன் பின்னர் ஐஜியாக பதவி உயர்வு வழங்கி சிபிசிஐடி ஐஜியாக பதவி வழங்கியுள்ளனர்.
இதன் பின்னர் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு அங்கு பணியாற்றி சட்டம் ஒழுங்கை சிறப்பாக கவனித்ததால் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பொறுப்பேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விடுமுறையில் உள்ள போது அவ்வப்போது காவல் ஆணையர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வந்தார்.