சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அப்பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் நேற்று (நவ.23) வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், "மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவின் அடிப்படையில் சேவை பணிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்படுகிறது.
அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கும், விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கும், எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்குச் சான்று அளிக்கும் சான்றிதழ்கள் ஆகிய 16 சேவைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்" என அவர் தெரிவித்திருந்தார்.
வருமான வரித்துறை அறிவுறுத்தல்
இந்தநிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், "கல்லூரி முடித்து வெளியே சென்ற மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் நிர்வாக ரீதியான சேவைகளை பெற விரும்பினால், அதற்குரிய சேவைகளுக்கான கட்டணத்துடன் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என வருமான வரித்துறை அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது மாணவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு ஜிஎஸ்டி 18 விழுக்காடு விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்த வேண்டும் ஜிஎஸ்டி கட்டணம் கடந்த நான்காண்டுகளாக மாணவர்களிடம் ஜிஎஸ்டி வசூல் செய்யாமல் இருந்ததால், தற்போது நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெறும் சேவைக்கு ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தத்தேவையில்லை.
சிண்டிகேட் குழு ஒப்புதல்
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவும் ஜிஎஸ்டி வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளதன் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சசிகலா விவகாரம் - அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல்?