சென்னை:சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத்துறை அலுவலர்களின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (ஏப்ரல் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மயில் அலகில் மலர் தான் இருந்தது என்பது தெரியவந்ததாகவும், சிலை மாயமானதற்கு காரணமான அலுவலர்களை அடையாளம் காண உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு விசாரணையை முடிக்க ஆறு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மயில் சிலை மாயமானது குறித்து காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், தொல்லியல் துறையிடம் இருந்து சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.