ஜெயா டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியபோது அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெயா டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 1996ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு, சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் குற்ற விசாரணை முறைச்சட்டம் 313ஆவது பிரிவின் கீழ், அமலாக்கத்துறை சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலாவிடம் கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இன்று அவரை ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா காணொளி காட்சி மூலம் சசிகலா ஆஜராகி குற்றவியல் நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கோப்புகளில் கையெழுத்து பெறவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் முதலாவது குற்றவியல் பொருளாதார நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசோகன், சென்னை உயர்நீதிமன்றம் காணொலி காட்சியின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதால், எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா இன்று நேரில் ஆஜராக வில்லை என்று தீர்ப்பு நகலை தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணங்கள் பெங்களூரு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்னும் பதில் வராததால் காணொளி காட்சியில், சசிகலாவிடம் தற்போது விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் சசிகலா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.