சென்னை:கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்திற்கு 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களைக் கொண்டு தலைவர், துணைத் தலைவர் தேர்வுசெய்யப்படுவர். ஆனால் போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, செந்தில் குமார் உள்பட எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி, மாவட்ட பஞ்சாயத்துக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றஞ்சாட்டினார்.