நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போதுவரை தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனைத் திறப்பது குறித்து இதுவரை எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும், அது குறித்து முதலமைச்சர்தான் அறிவிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ஊரடங்கை மீண்டும் நீடிப்பது குறித்து முதலமைச்சர் மருத்துவத்துறையின் உயர்மட்டக்குழுவினருடன் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது மருத்துவ உயர்மட்டக்குழுவினர் , தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று பரவுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் தொடங்கி உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதும் முடியாது. எனவே பள்ளிகளை டிசம்பர் வரையில் திறக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.