சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) ஆலோசனை மேற்கொண்டார். இதில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த மே மாதம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தைக் கடந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே மாதம் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், கரோனா தாக்கம் குறையவில்லை. இதன் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஜுன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையிலிருந்து வருகிறது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட்டன.