சென்னை:தமிழ்நாடு அரசு மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து, 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, விதிகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்த சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது. இந்த சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ’’மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது. திறமைக்கான விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது. ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல; திறமை விளையாட்டு. ஒட்டு மொத்தமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது.
மத்திய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு அதே பிரச்னை தொடர்பாக சட்டம் இயற்ற முடியாது. தற்போது, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட, ட்ரீம் 11 விளையாட்டு உள்ளது. நாடு முழுவதும் விளையாடப்படும் அதை எப்படி தடை செய்ய முடியும்? சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும்" என்ற வாதத்தை முன்வைத்தார்.