சென்னை:சென்னையில் சமீபத்தில் வெறி பிடித்த தெரு நாய் கடித்து சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எங்குப் பார்த்தாலும் தெரு நாய்கள் அதிகரித்துக்காணப்படுவதாகவும், மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சம் இன்றி வெளியில் செல்ல முடியவில்லை என்ற சூழலும் உருவாகி உள்ளது. மேலும், நாய்கள் காரணமாக ஏராளமான சாலை விபத்துகள் நடைபெறும் நிலையில் பலர் உயிரிழக்கும் அபாயமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சூழலில் தெரு நாய்களை என்ன செய்வது? அடித்துக் கொன்று விடலாமா? என்ற ஆத்திரமும் பொதுமக்களுக்கு வந்துள்ளது.
ஆனால் இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்றால்? மனிதர்கள் வாழ்வதுபோல நாய் உள்ளிட்ட விலங்குகளும் ஊருக்குள் வாழ முழு அனுமதியும் சுதந்திரமும் உண்டு. நாய்களை அடிக்கவோ, விஷம் வைத்தோ அல்லது வேறு வழிகளிலோ கொலை செய்யவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. மீறிச் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சட்ட ரீதியாக அனைத்து வழிகளும் உள்ளன.
அரசு சார் அதிகாரிகள் கூட நாய்களை கருத்தடை செய்வதற்காகப் பிடித்துச் சென்றால் எங்கு இருந்து அந்த நாய்களைப் பிடிக்கிறார்களோ அதே இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும். வேறு இடத்தில் மாற்றிக் கொண்டு விட்டால் அதுவும் சட்டப்படி குற்றம் என்றே கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி பாலூட்டும் பெண் நாய் மற்றும் கர்ப்பிணி நாய்களைப் பிடிக்கவும் சட்டத்தில் இடமில்லை. அது மட்டும் இன்றி தெரு நாய்களுக்கு ஒரு நபர் தனிப்பட்ட முறையில் உணவு வழங்குகிறார் என்றால் அதற்குச் சட்டத்தில் முழு அனுமதியும் உண்டு.
அரசிடம் என்ஜிஒ-கள் வைக்கும் கோரிக்கை: தெரு நாய்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் கருணையின் அடைப்படையில் அதிகம் சவால்களைச் சந்திக்க வேண்டி உள்ளதாக, மதுரை ஊர்வன அமைப்புத் தலைவர் விஸ்வநாத் கூறியுள்ளார். தெரு நாய்கள் மனித சமுதாயம் போலவே கூட்டமாகவும், தனியாகவும் வாழச் சுதந்திரம் பெற்றவை என்ற நிலையில், தொல்லை எனக் கருதி நாய்களைப் பொதுமக்கள் அல்ல அரசு அதிகாரிகள் கூட கொலை செய்ய அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.