சென்னை: பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகியவற்றின் இயக்குநருக்கு தலைமைச் செயலாளர், கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லையென்றால், முதலில் சரியான கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கற்றலில் குறைபாடிருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால், தலைமையாசிரியர் குழந்தையை District Early intervention Center, சிறப்பு கல்வியாளரிடம் ( Special Education ) அழைத்துச் செல்ல வேண்டும். கற்றலின் குறைபாடில்லாத குழந்தை என்றால், பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்குத் தேவையான முறையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஒரு குழந்தை பள்ளிச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்துத் தர வேண்டும்.
குழந்தைகள் பெரும்பாலும் செய்யும் தவறுகள்:
- பொது போக்குவரத்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தல்
- பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல்
- ஆசிரியர்களை அவமதித்தல்
- மற்ற குழந்தைகளை அடித்தல்
- ராக்கிங் செய்தல்
- புகைப்பிடித்தல்
- போதைப் பொருள் பயன்படுத்துதல்
- மது அருந்துதல்
- ஆசிரியர்களை உடல்ரீதியாக காயப்படுத்துதல்
- அச்சுறுத்துதல்
- பள்ளிக்கு இரு சக்கர வானத்தை ஓட்டி வருவது
- வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல்
- சாதி, மதம், பொருளாதர நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற குழந்தைகள் மற்றும் பணியாளர்களை புண்படுத்துதல்
- உருவகேலி செய்தல்
- பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை அல்லது படங்களை எழுதுதல்
- தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல்
உள்ளிட்ட ஏதேனும் செயல்களில் ஒரு குழந்தை ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும். மேலும், இதே குழந்தை 2 வது மற்றும் 3 வது முறையாக தவறு செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.
ஒழுங்குமுறை நுட்பங்கள்:
- ஐந்து திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும்.
- இரண்டு நீதிக்கதைகளை பெற்றோர்களிடமிருந்து கற்று வகுப்பறையில் சொல்ல வேண்டும்.
- ஐந்து செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்திற்கு படித்துக் காட்ட வேண்டும்.
- வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்திற்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.
- ஐந்து வரலாற்று தலைவர்களைப் பற்றி அறிந்து கொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.
- சிறந்த ஆளுமைகளின் உண்மைக் கதையை கற்றுக் கொண்டு வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்க வேண்டும்.
- நல்ல பழக்க வழக்கங்களை பற்றிய வரைபடம் எழுதுதல்.
- பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுதுதல்.
- சிறிய காய், கனி தோட்டம் பள்ளியில் அமைத்தல் மற்றும் 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் எழுதுதல்.
- ஏதேனும் பிடித்த பாடத்தை பற்றிய வரைபடம் எழுதுதல்.
- பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வைத்து கைவினைப் பொருட்களை செய்தல்.
- குழந்தைக்கு தனது தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து ஏன் இந்த தவறை செய்தார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்ட செய்தல்.
மூன்றாவாது எச்சரிக்கையிலும் குழந்தை தனது தவறை உணரவில்லை என்றால், 4 வது நிகழ்வில் அருகில் இருக்கும் காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அலுவலர் ( CWPO ) மூலம் குழந்தைக்கு அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும்.
குழந்தை 5 வது முறையாக தவறாக நடந்து கொண்டால், சுற்றுச்சூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும் என்பதால் பள்ளி நிர்வாகக் குழு ஒப்புதலோடு குழந்தையை அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம். மேற்காணும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிக்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!