சென்னை:காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "இன்று என்னுடைய பிறந்தநாள், 25 ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் வாழ்த்துப்பெற்று வருகிறேன். ஜெயலலிதாவிடம் வாழ்த்துப்பெற வேண்டும் என இன்று நினைவிடம் வந்து மரியாதை செலுத்தினேன். நேற்றைய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்றத்தீர்ப்புத்தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்.
காவல் துறை இரண்டு கதவுகளையும் திறந்து வைத்திருந்தால் அன்று கொலை நடந்திருக்கும், இரண்டு தரப்பினருக்கும் இடையில் தான் மோதல் ஏற்பட்டது, ஒருதரப்பு கூறுவது தவறானது. அதிமுக தலைமைக்கழகம் எம்ஜிஆரின் துணைவியார் ஜானகி அவர்களால் அதிமுக கட்சிக்கு கொடுக்கப்பட்ட இடம். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடுகின்றனர்.
ஜெயலலிதா அவர்களால் முதலமைச்சராக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான். ஜல்லிக்கட்டுப்போராட்டம் நடைபெற்ற பொது ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சராக இருந்தார். ஜல்லிக்கட்டுப் பிரச்னையை சுமூகமாக முடித்தவர் ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பன்னீர்செல்வம் தான். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான். டிவியைப் பார்த்து தான் சுட்டுக்கொன்றதே தெரியும் என்று தெரிவித்தார்.
சொந்த அண்ணனே பழனிசாமியை திருடன் எனச்சொல்கிறார். நீதிமன்றம் மட்டுமல்ல மக்கள் மன்றமே எங்கள் பின்னால் நிற்கிறது, அங்கு சந்திப்போம். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அனைத்து அக்கிரமத்துக்கும் காரணம், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் தான்.