சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் 1976-ம் ஆண்டும், இரண்டாம் பெருந்திட்டம் 2008-ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.
மூன்றாவது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரில் 29 மண்டலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது பெருந்திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வலியுறுத்தினார்.