தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே தேதியில் தேர்வு நடத்த திட்டம்! - Tamil Nadu universities

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வரும் காலங்களில் ஒரே தேதியில் தேர்வுகள் தொடங்கப்பட்ட அதன் முடிவுகள் ஒரே தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 31, 2023, 9:50 PM IST

Updated : Jun 1, 2023, 2:26 PM IST

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வரும் காலங்களில் ஒரே நாளில் தேர்வும் , ஒரே நாளில் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும் எனவும், அனைத்து கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்கள் 4 பருவங்களிலும் கட்டாயம் கற்பிக்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

மேலும் தமிழ்நாடு ஆளுநர் நடத்தும் கூட்டத்திற்கு செல்வது குறித்து துணை வேந்தர்களிடம் தான் கேட்க வேண்டும், துணை வேந்தர்கள் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போகக் கூடாது என்று நாங்கள் கட்டளையிடும் நிலையில் இல்லை. அது அவரவர் விருப்பம், அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி மண்டல கல்லூரி முதல்வர்களோடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.

2023-2024 ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, பாடத்திட்டம் மாற்றியமைப்பு, பல்கலைக்கழகங்களில் கட்டணம், நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தும் நிலை, கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது, மாநில கல்விக் கொள்கை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

இதில் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 19 பல்கலைக்கழக துணைவேந்தர்களும், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர், கல்லூரி கல்வி மண்டல இயக்குனர்கள் கலந்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்தும், பாட திட்டங்கள் குறித்தும், அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டம் நடைபெற்றுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கல்லூரி சேர்க்கையை பொருத்தவரை மாணவர்களுக்கு சில பிரச்னைகள் உள்ளது. பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பின்பு மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் செல்வார்கள். அப்படி செல்லும் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி தரவில்லை எனவும், சான்றிதழ்களை தர தனியார் கல்லூரிகள் மறுப்பதாகவும் புகார் சொல்கின்றனர். தற்போது அதை தடுத்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர விருப்பம் இருந்தால் முதலில் சேர்ந்த கல்லூரியில் கட்டிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று துணை வேந்தர்களிடம் சொல்லி கடிதம் எழுத கூறியுள்ளோம்.

அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடம் 4 பருவங்களிலும் நடத்தப்பட வேண்டும். இந்தப் பாடங்களை 100 சதவீதம் பல்கலைக் கழங்களிலும், கல்லூரிகளிலும் பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த பாடத்திட்டத்தை பல்கலைக் கழங்களில் 75 சதவீதமும், அவர்கள் பகுதிக்கு ஏற்ப 25 சதவீதம் மாற்றம் செய்து பிற பாடங்களை நடத்தலாம் என தெரிவித்துள்ளோம்.

தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கு தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாடத்திட்டத்தை இறுதி செய்து ஒரு வாரத்திற்குள் கொடுப்பார்கள். இந்த ஆண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் இரண்டு வருடத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும்.

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 6,986 பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். சிங்கப்பூரில் கூட 'நான் முதல்வன்' திட்டத்தை சிறப்பாக வரவேற்று உள்ளனர். 'நான் முதல்வன்' திட்டம் மூலம் படிக்கும் போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.

தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெவ்வேறு தேதிகளில் அறிவிக்கப்படுகிறது. அதனை மாற்றிபன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஒரே நாளில் தேர்வும், ஒரே நாளில் தேர்வு முடிவுகளும் வரும் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து முதுகலைப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பமும் ஒரே நேரத்தில் பெறப்பட்டு, மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை முறை அடுத்தாண்டு முதல் அமுல்படுத்தப்படும். இதனால் உயர்கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும்.

பல்கலைக் கழங்களில் காலிப் பணியிடம் இருக்கும் அதே நேரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அதிகளவில் பணியாளர்கள் இருக்கின்றனர். பல்கலைக் கழகத்தில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிடங்களை ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும். துணைவேந்தர்கள் நேர்காணல் மூலம் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி நியமனங்களை செய்வார்கள்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதன் மீதான முடிவு வந்த உடன் அதற்கான பணிகள் நடைபெறும்" என கூறினார்.

தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறித்த கேள்விக்கு, "ஆளுநர் கூட்டத்துக்கு துணை வேந்தர்கள் செல்வது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும், துணை வேந்தர்கள் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போக கூடாது என்று நாங்கள் கூற முடியாது, அது அவரவர் விருப்பம், அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது அதை அவர்கள் பார்ப்பார்கள் அதற்கு ஏற்றார் போல் அவர்கள் செயல்படுவார்கள்.

மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்த துணைவேந்தர்கள் உறுதுணையாக இருப்பார்கள், துணைவேந்தர்கள் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, கலந்து கொள்வார்களா, கலந்து கொள்ள மாட்டார்களா என்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம் கலந்து கொள்ளாமல் இருந்தால் நல்லது. கலந்து கொண்டால் துணைவேந்தர்களின் விருப்பம் அது" என்று கூறினார்.

இதையும் படிங்க:பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? அண்ணா பல்கலைக்கழகம் கேள்வி

Last Updated : Jun 1, 2023, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details