சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில், அரசு திட்டங்கள், திமுகவின் கள செயல்பாடுகள் ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், "மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
திராவிடத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வழித்தோன்றலான, நமது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும்' என்ற திராவிட கோட்பாட்டின்படி 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியான பள்ளிகொண்டா பகுதியில், காடனேரி பைபாஸ் சாலை அருகில் முப்பெரும் விழா மிக பிரமாண்டமாக நடக்க உள்ளது. அந்த விழாவில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதலமைச்சர் வெளியிடுகிறார்.
அனைவருக்கும் அனைத்தையும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற அண்ணாவின் குறிக்கோளின்படியும், மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் இந்த செயலியின் மூலம் ஒரே சொடுக்கில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
'மக்களுடன் ஸ்டாலின்' செயலியின் சிறப்பம்சம்: செயலியின் ஒரு பிரிவில் 'உங்கள் திட்டங்கள்' என்று ஒரு பொத்தான் இருக்கும். பொது மக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொறுத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல் தன்னிச்சையாக இச்செயலியில் வரும். குழந்தைகள், முதியோர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் என்று யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க மக்களுக்கு என்ன செய்தது என்றும், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் முழுதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், 234 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும். இச்செயலியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பற்றியும், முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, அதை கடைக்கோடி மக்களுக்கும், எளிமையான வழியில் கொண்டு சேர்ப்பதே அரசின் கடமையாகும். அத்தகைய தொலைநோக்கு பார்வையோடும், அடிப்படைத் தேவை என்னவென்ற புரிதலோடும் வடிவமைக்கப்பட்டதே 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலி என்றும், எனவே இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து வளமான தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றாகச் செயல்படுவோம்" எனவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க குரல் எழுப்புவோம்” - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!