சென்னை:தமிழ்நாடு அரசின் சார்பில் மலிவு விலையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வலிமை' சிமெண்ட் விற்பனையை இன்று (நவ.16) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கிவைத்தார்.
அரசின் இந்த வலிமை சிமெண்ட் சுப்பீரியர், பிரிமீயம் என இரண்டு தரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வெளிசந்தையில் விற்பனைக்கு வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.360 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தனியார் சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை 420 முதல் 450 ரூபாயாக இருந்தது. இந்த விலை ஜுன் மாதத்தில் 470 முதல் 490 ரூபாயாக உச்சத்தில் உயர்ந்தது. விலை ஏற்றம் குறித்து ஜுன் 14 ஆம் தேதி தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனால் சிமெண்ட் விலை 20 முதல் 40 ரூபாய் குறைக்க உடன்பாடு எட்டப்பட்டு, விலை குறைந்தது. தற்போதைய விலை 440 ரூபாய் என்பது மார்ச் மாத விற்பனை விலையை விட 4.7 விழுக்காடு அதிகமாகும்.
வலிமை சிமெண்ட் விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்த நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு சிமெண்ட் கழகம் 'வலிமை' எனும் சிமெண்டை இன்று அறிமுகம் செய்துள்ளது. முதலமைச்சர் அதை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதிக உறுதித் தன்மை வாய்ந்த..
தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால் 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த வலிமை சிமெண்ட் மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகளோடு அதிக உறுதித் தன்மை வாய்ந்ததாக, வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்ட சிமெண்டாக வலிமை சிமெண்ட் திகழ்கிறது.
வலிமை சிமெண்ட் விலையைப் பொறுத்த வரையில் வலிமை PPC 350 ரூபாய்க்கும், வலிமை OPC 365 ரூபாய் எனவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.