தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடங்கிய 40 நாள்களிலேயே, இதுவரையிலும் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளது வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து, உடல்நலக்குறைவின்மை ஆகியவையே யானைகள் உயிரிழப்புக்குக் காரணிகளாக அமைந்துள்ளன.
இவற்றுள் பிப்ரவரி 12 அன்று கோயம்புத்தூரின் வரப்பாளையத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரு யானை உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகிரியின் அஞ்செட்டி அருகே சில நாள்களுக்கு முன்பு முயலை வேட்டையாடியபோது துரத்திய யானையை இருவர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு வேட்டைத் தடுப்பில் தோல்வி
காடுகளின் அருகே பட்டா நிலங்களில் விவசாயம் செய்வோர், தங்களது விளை நிலங்களைப் பாதுகாக்க மின் வேலியை அமைக்கின்றனர். அந்த வேலியில் அதிக மின்னழுத்தம் உள்ள மின் கம்பியை இணைப்பதால், உணவுக்காகச் செல்லும் வனவிலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.
அதிக மின்னழுத்தம் பயன்படுத்தப்படுவதை மின்சாரத் துறை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. வனவிலங்கு வேட்டைத் தடுப்பில் ஏற்பட்ட தோல்வியுமே உயிரிழப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இது குறித்து வன விலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி பேசுகையில், "யானைகளின் உயிரிழப்புகள் தற்போது ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் யானைகளின் உயிரிழப்புகளுக்கு ரயில் விபத்து, மனித விலங்கு மோதல், வேட்டையாடுதல், மின்சார வேலி உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
யானைகள் இறப்பு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாட்டிலேயே அதிகளவில் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் யானைகளின் எண்ணிக்கை அதிமாக உள்ளன” என்றார்.