சென்னை:கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை மாடு முட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி, சாலைகளில் சுற்றி வரும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மாடுகள் சாலையில் அவிழ்த்து விடப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்துச் சென்றனர். இதனிடையே மாநகராட்சி ஆணையர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அது பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மாடு என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மாட்டின் உரிமையாளர் மீது எப்படி வழக்கு போட முடியும் என்று காவல் துறை குழம்பி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, திருநின்றவூர், வெளிவட்ட சாலை, சென்னை-செங்கல்பட்டு புறவழிச்சாலை, பழைய மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கால்நடைகளால் நாள்தோறும் விபத்துக்கள் நிகழ்கின்றன. கால்நடைகளை வளர்ப்பவர்களின் பொறுப்பற்ற தன்மையே இதற்கான முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைகளால் ஏற்படும் வாகன விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால், கால்நடை பிடிக்கும் 15 வாகனங்கள் மூலமாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், அபராதத் தொகை ரூ.2,000-இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
மேலும், பராமரிப்புச் செலவாக மூன்றாம் நாள் முதல், நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,000 வசூலிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அதே மாடு பிடிக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையிலும், சாலையில் செல்பவர்களுக்கு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கூறியதாவது, "வீட்டில் வளர்க்க வேண்டிய கால்நடைகள் எவ்வித கட்டுப்பாடின்றி, அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் திரியும் பொழுதுதான், இத்தகைய விபத்துகள் சென்னையில் அதிகமாக தற்போது நிகழ்கின்றன.
மேலும், இந்திய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 514 மில்லியன் உள்ளது. அதாவது, இந்திய மக்கள்தொகையில் பாதி அளவிற்கான கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. பெருநகர சென்னையில் 30 சதவீத விபத்துகள் கால்நடைகளால் ஏற்படுகின்றன" என தெரிவித்தார்.