சென்னை:சனாதனத்தை ஒழிப்பதாக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ - வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.வில்சன், இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க தந்தி டிவி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும். சரியான எதிர் மனுதாரரைச் சேர்க்காததால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வரக்கறிஞர் வில்சன், அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அதிகார எல்லையே தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது.
இது அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகார வரையறைக்கு உட்பட்டது. யார் அமைச்சராக தொடர வேன்டும், யார் தொடரக்கூடாது என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்திற்கு அதில் தலையிட அதிகாரமில்லை. அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை. நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல, ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது. அதனால், சனாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடர முடியாது.
பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் அதே வேளையில், மாற்றுக் கருத்து உள்ளவர்களின் கருத்துரிமையையும் பாதுகாப்பது முக்கியம். அந்த கருத்துரிமையை பாதுகாப்பது அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்கும் நீதிமன்றத்தின் கடமையாகும். சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளது. அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறிப்பிட்டுள்ளார்.
திருமணத்துக்கு முன்பு உறவு குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து குஷ்பூ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால், அவரது கருத்து தவறு என்று பொதுவெளியில் பேசலாமே, அதற்காக குற்றவழக்கு ஏன் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பேச்சுரிமை என்ற ஒருவரின் இயற்கையான மற்றும் அடிப்படைய மனித உரிமையை பாதுகாக்க வேண்டும்.
ஒருவரது பேச்சுரிமை கட்டுப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் 8 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில், மனுதாரர் இந்த வழக்கில் கூறியுள்ள காரணம் இடம்பெறவில்லை. எனவே, தேவை இல்லாமல் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய பெருமாள் முருகன் வழக்கில், ஒருவரது கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை வாங்காதே, படிக்காதே. ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் கேட்காதே, அதற்காக ஒருவரது கருத்துரிமையை தடுக்க முடியாது. அதை பாதுகாக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையடுத்து, சனாதனத்தை அமைச்சர் உதயநிதி எந்த அடிப்படையில் புரிந்து கொண்டார். வர்ணாசிரமம் மற்றும் சனாதனம் இடையேயான வேறுபாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த ஆராய்ச்சி என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, எம்.பி.,ஏ.ராசா தரப்பு வாதத்திற்காக வழக்கை நவம்பர் 10ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே அப்புறப்படுத்த நடவடிக்கை: சென்னை மேயர் பிரியா தகவல்