சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 24) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 8.25 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோவைக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கும் செல்வதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இவ்வாறு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விஐபி கேட் 6ஆம் எண் வழியாக வந்து விமானத்தில் ஏற இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக கவனத்துடன் இருந்தனர். இருப்பினும், இரு விமானங்களுக்கும் இடையேயான புறப்பாடு நேரங்களுக்கு இடையே வித்தியாசம் இருந்ததால் நேர மேலாண்மை உடன் கவனித்து வந்தனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருந்து வழக்கமாக காலை 7.25 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் காலை 8.25 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டுச் செல்லும். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விட்டது.
ஆனால், அந்த விமானத்தை இயக்கி வந்த விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த விமானி தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்று கூறி உள்ளார். இதனையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஆளுநர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை இயக்க மாற்று விமானியைத் தொடர்பு கொண்டனர்.
இதனையடுத்து ஆளுநர் செல்ல இருந்த விமானம் தாமதமாக 9.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் பரபரப்பான சூழலுக்கு உள்ளாகினர். உடனடியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவித்து, ஆளுநரை தாமதமாக விமான நிலையத்திற்கு வரும்படி அறிவுறுத்தினர்.