சென்னை:கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் மற்றும் தேவசகாயம் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சென்னை, கரூர், திருவண்ணாமலை மற்றும் கும்பகோணத்தில் உள்ள செந்தில் பாலாஜிக்குச் தொடர்புடைய நபர்கள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோகன் மற்றும் உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேலும், விசாரணை இன்றி குற்றவியல் வழக்குகளைத் தவிர்க்க முடியாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், இந்த ஊழல் தொடர்பான வழக்கை தொடக்கம் முதலே மீண்டும் விசாரிக்கவும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, லஞ்சம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த நிலையில், பணப்பட்டுவாடா வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.