சென்னை:நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடும் என மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனையின் போது ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதிமுகவில் தன்னை பாஜகவினர் இணைத்து விடுவார்கள் என ஓபிஎஸ் செயல்பட்டு வந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறுவதற்கு பின்னணி என்ன என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவில் தன்னை நீக்கியது செல்லாது என தொடர்ந்து நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ்ஸிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இறுதியில் பாஜகவினர் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து விடுவார்கள் என ஓபிஎஸ் நம்பியிருந்தார். ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் பல முறை அழுத்தம் கொடுத்தும் அதை அவர் மறுத்து விட்டார். அதிமுகவில் நீக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார்.
தமிழகம் முழுவதும் சுமார் 70 விழுக்கட்டிற்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நீதிமன்ற உத்தரவு காரணமாகவும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவும் வேட்பாளரை ஓபிஎஸ் திரும்ப பெற்றார். ஒருங்கிணைந்த அதிமுக-வைத்தான் பாஜக விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அளவுக்கு மேல் பாஜக-வால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. காரணம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு பாஜகவினர் அச்சமடைய செய்துள்ளது. இதனால், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவின் ஆதரவு பாஜகவிற்கு தேவைப்படுகிறது. இருந்தாலும் கடைசி நிமிடத்தில் மாறலாம் என ஓபிஎஸ்க்கு பாஜக நம்பிக்கை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் புறக்கணிப்பு, அண்ணாமலை பாதயாத்திரையில் புறக்கணிப்பு என பாஜக தொடர்ந்து ஓபிஎஸ்ஸை புறக்கணித்ததை அவரது அணியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், பாஜகவையும், அண்ணாமலையையும் ஓபிஎஸ் அணியினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒரே சமூதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஆதரிக்கிறார் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விமர்சனம் செய்திருந்தார்.
பல விவகாரங்களில் ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டதா என்று கேள்வி எழுப்பப்படும் போதும் கடைசி வரைக்கும் ஓபிஎஸ்ஸை பாஜக முழுமையாக கைவிடாது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர். எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்தார். மேலும் தனக்கான பலத்தை நிரூபிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு, டிடிவி தினகரனுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்ககோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் நீக்கத்தால் தென் மாவட்டங்களில் பல சவால்கள் இருந்தன. அதனால் தனக்கான செல்வாக்கை நிரூபிக்கும் விதமாகவும் தென் மாவட்டங்களில் ஆதரவை அதிகரிக்கும் விதமாகவும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தினார். இதனால், எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தும் அதே சமயம் சென்னையில் ஓபிஎஸ் அணி சார்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.