சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (மே 8) திடீரென சந்தித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ்சிற்கும், ஈபிஎஸ்சிற்கும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து டிடிவி தினகரனையும், சசிகலாவையும் நேரடியாக சென்று சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறி கொண்டே வந்தார். ஆனால், இதற்கு அமமுக தனி இயக்கம் எனவும் பொது எதிரி திமுகவை வீழ்த்துவதற்கு கூட்டணி அமைக்க தயார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
நான் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறேன் எனவும் சசிகலா கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க தன்னை அதிமுகவில் இருந்து நீக்கிய பொதுக்குழு செல்லாது என நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்தையும் நாடிய ஓபிஎஸ்ஸிற்கு இறுதியாக தோல்வியே கிடைத்தது. எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரித்திருக்கும் நிலையில் ஓபிஎஸ்சிற்கு அதிமுகவில் இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்ட நகர்வுகளை ஓபிஎஸ் முன்னெடுத்துள்ளார்.
முதற் கட்டமாக கடந்த மாதம் 24ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்தினார். இதற்கு, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இந்த மாநாட்டின் மூலம் தொண்டர்கள் என்பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஓரளவிற்கு நிரூபித்த ஓபிஎஸ், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தார். டிடிவி தினகரனுடன் சந்திப்பை நிகழ்த்திய ஓபிஎஸ், அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை மீட்கவே இருவரும் ஒன்றிணைந்துள்ளோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றிணைவதால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முடியும் என இவர்களின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுப்படி எடப்பாடி பழனிசாமியை துரோகி என கூறி டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் இணைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அன்று சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சை இணைத்துக் கொண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நீக்கினார். அன்று ஓபிஎஸ்சிற்கு எதிரியாக இந்த டிடிவி தினகரன் இன்று நண்பனாக மாறியுள்ளார். அதிமுகவில் தேனி மாவட்ட செயலாளராக இருந்த சையதுகான், இவர்களின் இணைப்பிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்வது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, அதிமுகவை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மீட்பது தொடர்பாகவும், அடுத்தடுத்த மாநாடு மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும், பாஜகவுடனான கூட்டணி தொடர்பாகவும், மேலும் அடுத்தகட்ட நகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.