சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கரோனா சமயத்தில் வெளியானாலும் நல்ல வசூலை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். இப்படம் இந்திய சினிமாவையே திருப்பிப் போட்டது.
கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்து, கமல்ஹாசனின் திரை வாழ்விலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதனால் லோகேஷ் கனகராஜ் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விக்ரம் படத்தை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'லியோ' என்று தலைப்பு வைக்கப்பட்டது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் இது 100 சதவீதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், திரிஷா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'லியோ'. நீண்ட நாட்களாக படம் குறித்த எவ்வித அப்டேட்டும் வராததால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, கடந்த வாரம் முதல் படத்தின் பல்வேறு மொழிகளில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, மிக முக்கியமான நிகழ்ச்சியான படத்தின் 'இசை வெளியீட்டு விழா' எப்போது என்று காத்துக்கொண்டிருந்த ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில், இந்த மாதம் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்படி, அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தின.
மேலும், டிக்கெட்டுகளும் விநியோகம் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமானது. ஆனால் திடீரென நேற்றிரவு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுlலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ X தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாஸ் வேண்டும் என்று அதிகமான பேர் கோரிக்கை வைப்பதாலும், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்களுடன் உங்களோடு தொடர்பில் இருப்போம். மேலும், பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என தெரிவித்துள்ளனர்.