சென்னை: நடிகை நயன்தாராவை சுற்றி எப்போதும் வதந்திகள் பரவி வருவது வாடிக்கையாகி விட்டது. தற்போது புதுவரவாக ஒரு விஷயம் சுற்றி வருகிறது. அதாவது சென்னையில் உள்ள அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கிவிட்டார் என்பதுதான் அது. அந்த திரையரங்கை வாங்கியுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கட்ட முடிவு செய்திருப்பதாக பரவிய தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் அடையாளமாக இருந்த அகஸ்தியா திரையரங்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு மூடப்பட்டு விட்டது. 50 ஆண்டுகாலமாக வட சென்னை பகுதியில் செயல்பட்டு வந்தது இந்த திரையரங்கம். கரோனா சமயத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய முடியாமல் மூடப்பட்டது. இந்த திரையரங்கைத் தான், நடிகை நயன்தாரா வாங்கி மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து திரையரங்கின் உரிமையாளர் தரப்பு கூறும்போது, “ஏற்கனவே மெட்ரோ பணிகளுக்காக திரையரங்கின் ஒரு பகுதியை அரசு கைப்பற்றி உள்ளது. மேலும் அகஸ்தியா திரையரங்கு தனிநபர் சொத்து கிடையாது என்றும், அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்றும் கூறிய அவர் அறக்கட்டளை இடம் என்பதால் இதனை விற்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் இணைந்த ராஜா ராணி கூட்டணி - நயன்தாரா 75 அப்டேட்!