சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லியில் கடந்த 26-ஆம் தேதி சந்தித்தனர். இதில், அதிமுகவினர் எதிர்பார்க்காத பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். இதில், அதிமுக - பாஜக இடையே ஏற்படும் மோதல், அதிமுகவின் உட்கட்சி விவகாரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியது.
அண்ணாமலை குறித்து பல்வேறு புகார்களை அதிமுகவினர் பேச இருந்த நிலையில் அந்த சந்திப்பில் அவர் இருந்தால் பேச முடியவில்லை என கூறப்படுகிறது. திமுக மூத்த நிர்வாகிகள் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அடுத்ததாக அதிமுக என்று குறிப்பிடாமல் அவர்களுடைய சொத்துப்பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பாஜக நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அண்ணாமலை, "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் ஓர் அடிப்படை உறுப்பினராக செயல்படுவேன்" என கூறியிருந்தார்.
தற்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அண்ணாமலை மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்தாக கூறப்பட்டது. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரையும் இணைத்து வைப்பதற்காக அண்ணாமலை முயற்சி எடுத்தார். அதை வெளிப்படையாக பொதுவெளியிலும் கூறினார். இதற்கு, எங்கள் கட்சி விவகாரங்களில் கருத்து கூறுவதற்கு அண்ணாமலை யார்? என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜகவிற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஈரோடு கிழக்கில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் 43,000 மூஸ்லீம் வாக்குகள் திமுகவிற்கு சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து, பாஜகவில் மாநில நிர்வாகியாக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததை அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், தனித்து பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணியை அமைக்கலாம் என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்ததாக கூறப்படுகிறது. தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அண்ணாமலை வெளிப்படுத்தி வந்தார்.
பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைத்தால், அதில், பாமக, தமாகா, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை ஒன்றிணைக்க அண்ணாமலை முடிவு செய்திருந்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் 7 தொகுதிகளுக்கு மேல் பெற முடியாது எனவும் அப்படியே அதிகமான தொகுதிகள் பெற்றாலும் எடப்பாடி பழனிசாமியின் இலக்கு 2024 இல்லை எனவும் அவரது இலக்கு 2026 சட்டப்பேரவைதான் எனவும் டெல்லி பாஜக மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியது. மேலும் தனித்து போட்டியிடும் பட்சத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் 2026-ல் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து கூறிய அண்ணாமலையின் நிலைப்பாட்டிற்கு இந்த சந்திப்பின் மூலம் டெல்லி பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.