சென்னை:காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல் துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 'காவல்துறை சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராகப் புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
மாநில அளவில் உள்துறைச்செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியினைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அலுவலர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக்கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர். உள்துறைச்செயலாளர், டிஜிபி அடங்கிய மாநிலக் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அடங்கிய மாவட்டக் குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
உயர் அலுவலர்களுக்கு எதிராகப் புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் காவல் நிலைய மரணங்களில் 2018ஆம் ஆண்டு கணக்கின் தென் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், 76 காவல் மரணங்கள் 5 ஆண்டுகளில் நடந்தும், ஒரு வழக்கில் கூட தண்டனை விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் இந்த வழக்கு முக்கியமான ஒன்று என்றும், உச்ச நீதிமன்றம் கண்காணித்தாலும், சட்டத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் இல்லை என்பதாலும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், உள்துறைச் செயலாளர் தான் குழுவை தலைமை வகிக்கிறார் என்றும், அவர் காவல்துறையைச் சார்ந்தவர் இல்லை என்பதாலும் அவர் தலைமையில் குழு அமைத்ததில் எந்த தவறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.