சென்னை: சந்திரயான் 3 விண்கலம் சத்தீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கு முந்தைய சந்திரயான் 2 திட்டத்திற்கும், தற்போதைய திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?, தவறுகளை தவிர்க்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்த விளக்கத்தில், "இதில் சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் ஏற்கெனவே விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. எனவே இம்முறை புரொப்பல்ஷன் மாட்யுல் எனப்படும் நிலவைச் சுற்றி வரும் பகுதி உள்ளது. இதில் நிலவிலிருந்து பூமியை கண்காணிப்பதற்கான சோதனை அடிப்படையிலான ஒரு ஆராய்ச்சி பகுதி (SHAPE) உள்ளது.
கடந்த முறை நிலவில் மெதுவாக தரையிறங்க முயற்சித்த போது நிகழ்ந்த தவறுகளை தவிர்ப்பதற்காக, இந்த முறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஒரு சென்சாருக்கு பதிலாக 2 சென்சார்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஒன்று பழுதானால் கூட இரண்டாவது நிச்சயம் பயன்படும். மேலும் 2 வழிநடத்தும் கேமராக்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து சந்திரயான் லேண்டிங்கின் போது தாங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சந்திரயான் 2 உடன் ஒப்பிடும் போது, சந்திரயான் 3 இன் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இது தவிர ரோவர், லேண்டர் என அனைத்தும் இரண்டு திட்டங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கிறது. எல்லாம் சரியாக நடந்தால் ஆகஸ்ட் இறுதியில் நிலவின் பரப்பில் சாப்ட் லேண்டிங் நடக்கும் என நம்புகிறோம்" எனவும் பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: "சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்; தரையிறங்குவதிலும் பிரச்னை இருக்காது" - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் நம்பிக்கை!