சென்னை: சென்னை பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. புழல் சிறையில் அடைக்கப்பட்டால் ரவுடிக்குள் கோஷ்டி மோதல் ஏற்படும் என்ற அடிப்படையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை கடலூர் சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில் கடலூர் சிறைச்சாலையில் துணை ஜெயிலர் மணிகண்டன் திடீரென சிறையில் சோதனை மேற்கொண்ட போது, ரவுடி தனசேகரிடமிருந்து சிறையில் சொகுசாக வாழ்வதற்கு பயன்படுத்திய செல்போன் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பழி வாங்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி துணை ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஜெயிலர் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடலூரில் எண்ணூர் தனசேகரன் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் கடலூர் ஜெயிலில் பணம் கொடுத்து செல்போன் மற்றும் விரும்பிய சாப்பாடு என சொகுசு வாழ்க்கை வாழ பலமுறை முயற்சித்தும், சிறைத்துறையினர் தீவிர கண்காணிப்பு மூலம் அதைத்தடுத்து நிறுத்தினர். பிரபல ரவுடியாக பல கோடி சம்பாதித்து தன்னால் சிறையில் அதிகாரம் செலுத்தி பணம் மூலம் உல்லாசமாக வாழ முடியவில்லை என்று மன உளைச்சலில் அவர் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சிறையில் இருந்து கொண்டே செல்போன் கான்ஃபெரன்ஸ் கால் மூலமாக பல கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு நடத்தி வருவதுதான், ரவுடி எண்ணூர் தனசேகரனின் ஸ்டைல். ஒருபுறம் பணம் பறிக்க வேண்டிய தொழிலதிபர்கள் உள்ளிட்டப் பல்வேறு நபர்களுக்கு செல்போன் மூலம் சிறையிலிருந்து அழைத்து மிரட்டல் விடுவார்.
அதன்பின் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே கான்ஃபெரன்ஸ் கால் போட்டு தன்னுடைய அடியாட்களை ஆயுதங்களுடன் மிரட்டும் நபரின், வீட்டில் நிறுத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து, பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுவதும் பல்வேறு விசாரணைகளில் தெரியவந்தது.