சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றமும் பொதுக்குழு செல்லும் என்றும், தீர்மானங்கள் தொடர்பாக கிழமை நீதிமன்றங்களில் பார்த்துக் கொள்ளவும் என்றும் தீர்ப்பு வழங்கியது. பின்னர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சென்னை உயர்நீதிமன்ற உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஏற்கனவே நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கில் ஒரு இடையீட்டு மனுவை ஓபிஎஸ் உட்பட 4 பேர் தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு நீதிபதி கொண்ட அமர்வு பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஓபிஎஸ் உட்பட 4 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபீக், "ஏற்கனவே உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஓபிஎஸ் உட்பட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என தீர்ப்பு வழங்கினர்.
ஆனால், இந்த தீர்ப்பு, இடையீட்டு மனு மீதான தீர்ப்பாகும். பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக அசல் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்ற உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் ஓபிஎஸ்க்கு பின்னடைவாகவும், ஈபிஎஸ்க்கு சாதகமாகவும் வந்துள்ளது.
பொதுக்குழு செல்லாது என ஒற்றை நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பு மட்டுமே ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்தது. நேற்று (ஆக.25) வந்த தீர்ப்பு ஓபிஎஸ்க்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், "தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்" என கூறியிருக்கிறார்.
தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ் தரப்பு ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "நீதி, நேர்மை, தர்மம் வென்றுள்ளது. ஒரு சிலரை தவிர்த்து அங்கிருந்து அதிமுகவிற்கு வருவோர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்" என கூறியிருக்கிறார்.