தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகளை சரிசெய்து, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைக்கும் வேலையை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கொண்டு பாஜக சமசரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், வருகிற 2024ஆம் ஆண்டு, நடக்க உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு தமிழ்நாட்டில் அரசியல் தலையீட்டிற்கான வழியாகவும் அதன் கூட்டணியில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியான அதிமுக தற்போது பிளவுபட்டு உள்ளதால் பாஜகவிற்கு முதலில் அதனை சரிய செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரை தவிர்த்து, ஈபிஎஸ்-பாஜக தரப்பிற்கும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ்-உடன் இணைந்து பயணிக்கவே ஈபிஎஸ்-க்கு பாஜக அறிவுறுத்தி வந்தது. ஆனால், பாஜக கூறியதை ஈபிஎஸ் மறுத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார்.
அப்போது அரசியல் பேசவில்லை என்று அவர் கூறினாலும், "நான் ஒற்றைத் தலைமையாக இருக்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் உதவவேண்டும். வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத்தேர்தலில், என் தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்கிறேன். பாஜக போட்டியிடும் இடங்களில் கண்டிப்பாக வெற்றியடைய செய்கிறேன்" என அமித் ஷாவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.
திமுகவை வீழ்த்த ஓரணியில் அதிமுக:ஆனால், அதற்கு அமித் ஷா, "ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்படுங்கள்" என ஈபிஎஸ்-இடம் மீண்டும் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைய வாய்ப்பே இல்லை என்ற நோக்கில் ஈபிஎஸ்ஸின் செயல்பாடுகள் இருந்தன.
"திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறேன்" என டிடிவி தினகரன் கருத்துக்கு ஈபிஎஸ், "டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை" எனக் கூறியிருந்தார்.
பாஜக பல்வேறு விதத்தில் அறிவுறுத்தியும் ஓபிஎஸ் உடன் இணைவதற்கு ஈபிஎஸ் மறுத்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டமளிப்பு விழா நிகழ்சிக்கு வந்த மோடியை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக வரவேற்க மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் ஈபிஎஸ்-க்கு பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, ஓபிஎஸ் அருகில் அமரவேண்டும் என்பதற்காகவே கூட்டத்தை ஈபிஎஸ் புறக்கணித்தார்.
பாஜகவை ஈபிஎஸ் வெறுக்கிறாரா?: பாஜகவின் தொடர் அழுத்தத்தால் மோடியைத் தொடர்ந்து தனியார் நிகழ்ச்சிக்கு வந்த அமித் ஷாவைச் சந்திக்க ஈபிஎஸ் விரும்பவில்லை. மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுமேற்கொண்ட ஈபிஎஸ், "தனியார் நிகழ்ச்சிக்கு வந்த அமித் ஷாவை நான் ஏன் சந்திக்கவேண்டும். அவர்கள் கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு" எனக்கூறிய கருத்து ஈபிஎஸ்-பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க துணிந்துவிட்டார் எனக் கூறப்பட்டது.