சென்னை:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை உருவாக்கி அதற்கு 'இந்தியா' என பெயர் சூட்டியுள்ளனர். இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாஜகவானது காங்கிரஸ் மற்றும் திமுகவை குறிவைத்து கடும் விமர்சங்களை முன் வைத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மாநில கட்சியாக இருக்கும் திமுகவானது தேசிய கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தென் இந்தியாவில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற பேச்சும் எழுகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை போல பெரும் வெற்றியை பதிவு செய்தால் அந்த வாய்ப்பு திமுகவுக்கு வரலாம் என்றும் முன்னொரு காலத்தில் பிரதமரை உருவாக்கும் கிங் மேக்கராக காமராஜர் விளங்கியதை போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுக்கலாம் அல்லது அவரே கூட பிரதமராகலாம் என்று திமுகவினர் பேசி வருகின்றனர்.
இப்படியான பரபரப்பான அரசியல் சூழலில், தி.மு.க. இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாக காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெளியாகின்றன. பிரதமராகும் லட்சியம் தி.மு.க. தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என மின்னஞ்சல் வாயிலாக முதலமைச்சரிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தேசிய அரசியலில் தி.மு.க. ஏற்கனவே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தன் அழுத்தமான முத்திரையை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதித்து இன்றைக்கு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளது. வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான செயல்பாடுகளுக்காக பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் அரசுக்கு உறுதுணையாக நின்று தேசிய அரசியலில் தி.மு.க.வின் முத்திரையைப் பதிக்கச் செய்தவர் தலைவர் கலைஞர்.