சென்னை: தமிழ் மாெழியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதியின் அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடப்புத்தகத்தில் மாெழி என்ற தலைப்பில் முதல் பாடமான திராவிட மொழிக் குடும்பம் இடம் பெற்றுள்ளது. இதில் திராவிட மாெழிகள் உருவான விதம், அவற்றுக்குள் உள்ள தொடர்புகள் குறித்தும் இடம்பெற்றுள்ளன.
திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்கின்றனர். இவ்வுரைப்பகுதி, தமிழின் சிறப்பைப் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு உணர்த்துகிறது.
2023-24ஆம் கல்வியாண்டில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தின் 7ஆம் பக்கத்தில், செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில், ”கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள். இயல் எழுதி, இசை எழுதி, நாடகம் எழுதி முத்தமிழுக்கும் தம் பங்கினை முழுமையாக அளித்தவர், கருணாநிதி. இரண்டு லட்சம் பக்கங்களுக்கும் அதிகமான எழுத்து கருணாநிதி உடையது. எதிர்வரும் எந்த கேள்விக்கும் சளைக்காது வந்து விழும் சுவையான பதில்களாலும், கேட்போரை கட்டிப்போடும் அருவி பேச்சாலும் தமிழர் மனங்களை கொள்ளை கொண்டவர்.
முத்தாரம், முரசொலி, வெள்ளி வீதி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். பொறுத்தது போதும் பொங்கி எழு என்பன போன்ற தீந்தமிழ் வசனங்களால் திரை உலகிற்கு திசைகாட்டியவர், கருணாநிதி. தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம், திருக்குறள் உரை, சிலப்பதிகார நாடகம், தென்பாண்டி சிங்கம், பொன்னர் சங்கர் என 178க்கும் மேற்பட்ட படைப்புகளை செந்தமிழுக்கு சுவையாய் ஆக்கித் தந்திருக்கிறார்.