தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? - முதலமைச்சர் கேள்வி

MK Stalin: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin questions central government
மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 6:52 PM IST

சென்னை:தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி, இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு.

ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.

இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களுக்காக செய்தது என்ன? மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார், தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு” என பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, தமிழ்நாடு மத்திய அரசுக்கு செலுத்தும் வரியை விட தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 2.8 லட்சம் கோடி ரூபாயும், மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் அதே காலகட்டத்தில் 2.58 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் மூலம் தமிழ்நாடு வெறும் 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஏதாவது செய்துள்ளதா என்று பார்த்தால், இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

மேலும், சமீபத்தில் தமிழகத்தை பாதித்த இரண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது எனவும், ஆனால் மத்திய அரசு இந்த சுமைகளில் இருந்து மாநில அரசை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு - எம்பி செந்தில்குமார் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details