தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களைகட்டும் பொங்கல் பண்டிகை! தமிழர் வீரம் பேசும் ஜல்லிக்கட்டு! குதூகலம் அடையும் கொண்டாட்டங்கள்!

Pongal Jallikattu Festival : தை திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பொங்கலுக்கே பெயர் போன மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 2:37 PM IST

Happy Pongal 2024
Happy Pongal 2024

சென்னை :தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து வாசல் தெளித்து கோலமிட்டு புதுப்பானை வைத்து பொங்கலிட்டு அதை சூரிய பகவனுக்கு படைப்பதே நினைவுக்கு வரும்.

மேலும் கரும்பு, நீண்ட நாட்களுக்கு பின் நெடுநாள் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய மக்கள், கோயிலில் குவியும் மக்கள் கூட்டம் என அனைத்தும் பசுமையான நிகழ்வுகளாக நின்று செல்லும். மறுபுறம் பொங்கல் பண்டிகைக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.

மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காணவும், கலந்து கொள்ளவும் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் மக்கள் திரள் திரளாக படையெடுத்து வருவர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ( தைப்பொங்கல்) :பொங்கல் திருநாளை துவக்கி வைக்கும் வகையில், தைத் திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் அன்று ஆண்டுதோறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்தாண்டும் வரும் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மைதானத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 11ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளும், மாடு பிடி வீரர்களும் தங்கள் பெயர்களை இணையதளம் மூல ம் பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார்.

இதனடிப்படையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 2 ஆயிரத்து 400 காளைகளும், ஆயிரத்து 318 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 ஆயிரத்து 331 காளைகளும், ஆயிரத்து 379 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலமேடு ஜல்லிக்கட்டு ( மாட்டுப் பொங்கல்): அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து மாட்டுப் பொங்கல் தினத்தில் ( ஜன. 16) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது ஆகும். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மஞ்சமலை ஆறு திடலில் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

பாலமேட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 3 ஆயிரத்து 677 காளைகளும், ஆயிரத்து 412 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 ஆயிரத்து 170 காளைகளும், ஆயிரத்து 849 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்த நிலையில் நடப்பாண்டில் காளைகளின் முன்பதிவு அதிகரித்து உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (காணும் பொங்கல்) : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலே அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காட்டிலும் அதிகளவு மக்களால் எதிர்பார்க்கப்படுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ரசிகர்கள் குவிவதால் அலங்காநல்லூரி ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்து உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5 ஆயிரத்து 200 காளைகளும், 2 ஆயிரத்து 171 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், இம்முறை காளைகளின் எண்ணிக்கை வரலாறு படைக்கும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. புகழ்பெற்ற இந்த மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 176 காளைகளும், 4 ஆயிரத்து 514 மாடு பிடி வீரர்களும் கலந்து கொள்ள முன்பதிவு செய்து உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஓரிடத்தில் நடத்தும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, வரும் ஜனவரி 23ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரங்கை திறந்து வைக்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு பெயர் வைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர்சூட்டப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த அரங்கத்திற்கு எதிராக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடப்பாண்டு வழக்கம் போல் நடைபெறும் இடத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அடுத்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரஙக்த்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்; சென்னை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details