தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு ஒதுக்கிய ரூ.3,000 கோடி என்ன ஆனது?: அரசுக்கு அண்ணாமலை கேள்வி - மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதி என்ன ஆனது

ஆர்டிஇ திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய ரூ.3,000 கோடி என்ன ஆனது என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை
அண்ணாமலை அறிக்கை

By

Published : Feb 23, 2023, 7:06 PM IST

சென்னை:அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் சிறப்பான கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் (RTE) செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், ஏழை, எளிய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வி செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளுக்கு இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டத்துக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ.1,598 கோடியும், 2022-23-ம் ஆண்டு திட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.1,421 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகளாக தமிழக பள்ளிகளுக்கு மழலையர் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு வழங்காவிட்டால், வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தனியார் பள்ளி சங்கங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

இத்திட்டத்துக்காக இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.3,000 கோடி என்ன ஆனது என்பதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகளில் தங்களது மெத்தனத்தை அமைச்சர் காட்டக் கூடாது. உடனடியாக கல்வி கட்டண நிலுவை தொகையை பள்ளிகளுக்கு வழங்கி நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் பாழடைந்து கிடக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளி கட்டடங்களை சீரமைக்க உள்ளதாக கடந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அந்த பள்ளி கட்டடங்களின் தற்போதைய நிலையை அமைச்சர் கூற வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்போ, விளையாட்டு மைதானங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவாரா? அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அவர் என்ன நடவடிக்கைகளை இதுவரை எடுத்துள்ளார்? அரசுப்பள்ளிகள் மேம்படுவதால் தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் என்ற அச்சத்திலும், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 25% இடங்களை ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக ஒதுக்க விரும்பாமலும், ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தையே முடக்க நினைக்கிறதோ என்ற வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும். கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பெண் கல்விக்கு எதிரான கருத்தை விதைக்கும் எண்ணம் நிறைவேறாது: முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details