சென்னை:கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016ஆம் ஆண்டு மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 19 அன்று, வருமானத்துக்கு அதிகமாக பொன்முடி சொத்து சேர்த்தது நிரூபணமாகிறது என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
மேலும், டிசம்பர் 21ஆம் தேதியான இன்று, தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் கூறி இருந்தார். இதன்படி, இன்று அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி.. மத்திய அமைச்சர் கூறியது என்ன?