சென்னை: கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் நேரத்தில் பேரிடியாக வந்துள்ளது மூல பொருட்கள் விலை உயர்வு. நிதி வசதி, கடனுதவி, வரி சலுகை உள்ளடக்கிய பட்டியலை தொழித்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னையில் மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் சண்முக வேலாயுதம் இது பற்றி பேசுகையில், "அண்மைக் காலத்தில் எஃகு விலை 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தாமிரத்தின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டில், இரும்பு தாது உள்ளபோது எஃகு விலை ஏன் உயர்கிறது. ஒருசில நிறுவனங்கள் இணைந்து நாட்டில் செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்துகின்றன. அரசு இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூல பொருட்கள் விலை ஏற்றத்தால் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது புதிய ஆர்டர்கள் இல்லாமல் சிறு, குறு நிறுவனங்கள் சுணக்கம் அடைந்துள்ளது. குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இவற்றிடமிருந்து உதிரி பாகங்கள் கொள்முதல் செய்யும் பெரு நிறுவனங்கள் வரி சலுகைகளை கொடுக்க வேண்டும். இதன்மூலம் குறு நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் குவியும்.
இது தவிர ஜிஎஸ்டியில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட இ-வே பில் நடைமுறையில், சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட எல்லையைக் கடக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இயந்திரக் கோளாறு அல்லது பிற காரணங்களால் வாகனம் செல்வதில் தாமதம் ஏற்பட்டால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.
சர்ஃபாசி சட்டத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நஷ்டத்தை சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கடனை வாராக் கடனாக வகைப்படுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கும் நிறுத்தி வைக்கவேண்டும். பொதுத் துறை, அரசு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்கும்போது கேட்கப்படும் பாதுகாப்பு தொகையை குறைக்க வேண்டும்.
மற்றொரு முக்கிய சலுகையாகப் பார்க்கப்படுவது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அதிபர்களுக்கான வருமான வரிச் சலுகை. நிறுவனம் லாபகரமான இயங்கும் காலத்தில் உட்சபட்ச வரியை செலுத்தும் உரிமையாளர்கள், அடுத்த சில ஆண்டுகள் தொடர் நஷ்டத்தை சந்தித்தால் தொழிலை தொடர முடியாத சூழல் நிலவுகிறது. மேசமான பொருளாதாதர சூழல்களில் இதனை குறைப்பது சிறு, குறு தொழிலதிபர்களுக்கு ஊக்கமாக அமையும்" என்றார்.
கரோனா தொற்று தொடங்கிய காலத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை பிரதான பிரச்னையாக இருந்தது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியது இங்குள்ள நிறுவனங்களுக்கு சவலாக அமைந்தது. தற்போது அவை சற்று குறைந்திருந்தாலும், இன்னும் போதிய ஆட்கள் கிடைக்கவில்லை என தொழில்துறையினர் கூறுகின்றனர். பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் 70 சதவிகித அளவுக்கு கரோனாவுக்கு முந்தைய உற்பத்தி நடைபெறுகிறது எனக் கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து தொடர்ந்து பல்வேறு நிதிப் பிரச்னைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. அவற்றை சரிசெய்யும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஆதாரம் கிடைக்கும் திட்டங்கள், சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வரி சலுகைகள் ஆகியவை தேவை என்கிறார் கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார். இவர், "மூல பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை உற்பத்தி நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த அவசர கடனுதவி திட்டத்தின் கீழ் ஏராளமானவர்கள் கடன் பெற்றுள்ளனர். இருப்பினும், சிறு நிறுவனங்கள் மீள கடன் மட்டுமே போதுமானதாக இருக்காது. மத்திய அரசு வரி குறைப்பு செய்ய வேண்டும்" என்றார்.
என்ன எதிர்பார்க்கின்றனர் சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்கள்? கரோனா காலத்தில் இழந்த பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மீட்க எதிர்வரும் மத்திய அரசின் பட்ஜெட்டையும், அதில் தங்களுக்காக அறிவிக்கப்படும் புதிய திட்டங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள். இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்குமா மத்திய அரசு?