சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்ட போதும், கடந்த முறையை போல சென்னையில் குறைவாக (59.06 %) வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 80.14 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சென்னையின் பூர்வக்குடி மக்கள், நகருக்கு வெளியே குடியமர்த்தப்பட்ட நிலையில், அவர்கள் வாக்களிக்க போதுமான வாகன வசதி ஏற்படுத்தவில்லை.
மாற்று குடியமர்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சென்னை போன்ற படித்த மக்கள் வசிக்கும் நகரில் வாக்கு சதவீதம் குறைவது வெற்றி வாய்ப்பை பெரிய அளவில் மாற்றி அமைக்கிறது. கடந்த முறை 1 விழுக்காடு வாக்குகளே ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றின.
தபால் ஓட்டு குளறுபடி:
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்யும் முறை முதல்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களின் வாக்குகள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று பெறப்பட்டன.
அதே போல், மாற்றுதிறனாளிகளுக்கும் தபால் ஓட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முனைவோருக்கு வாகன வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்றும் ஒரு சிலர் வருத்தம் தெரிவித்தனர்.
இதனிடையே, மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை அரசு ஊழியர்கள் தங்கள் தபால் ஓட்டுகளை செலுத்தலாம் எனவும் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணைய ஏற்பாடு:
கரோனா தொற்று பரவல் காரணமாக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது அனைவரும் அறிந்ததே. கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் மாலை 6மணி முதல் 7மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஜனநாயக உரிமை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேராசிரியர் ராமு மணிவண்ணன் பொதுமக்கள் முகக்கவசம், கையுறை அணிந்து, தங்கள் வாக்குகளை செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 74.24 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இந்தமுறை 72.78 விழுக்காடு என வாக்குகள் பதிவாகி உள்ளன.
கட்சிகளும்- சின்னமும்
தேர்தலில் போட்டியிடும் சிறிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், குற்றசாட்டு வைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கியதால் மக்களிடையே சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதே போல் வேளச்சேரி வாக்குசாவடியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், விவிபேட் இயந்திரமும் முறையாக எடுத்துச் செல்லாததால் 3 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது போன்ற குளறுபடிகள் நடந்திருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதும், வாக்கு சதவீதத்தை உயர்த்த முடியவில்லை என்பதே நிதர்சனம்.